மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ரவுப் பாகிஸ்தானில் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்தி அப்துல் ரவுஃபை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டு 40 துணை ராணுவத்தினர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தவர் மசூத் அசார்.

New Delhi:

பாகிஸ்தானில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ரவுப் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அப்துல் ரவுப் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைது குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

44 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அப்துல் ரவுபை கைது செய்திருக்கிறோம். அவருடன் ஹம்மாத் அசார் என்ற முக்கிய தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளார். 
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Newsbeep

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்துல் ரவுப் கைது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் இயல்பான ஒன்றுதான் என்றும், இதில் நெருக்கடிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷெர்யார் கான் அப்ரிதி கூறியுள்ளார். 

தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அமைப்பான எஃப்.ஏ.டி.எஃப். கெடு விதித்திருக்கிறது. இந்த நிலையில், ரவுபின் கைது  பாகிஸ்தான் அச்சம் அடைந்திருப்பதை காட்டுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.