This Article is From Dec 06, 2018

மேகதாது விவகாரம்: தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்!

தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது

மேகதாது விவகாரம்: தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்!

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கும், அணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. சிறப்புக் கூட்டத்தில் கர்நாடகாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதிதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது' என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். அணைகட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்' என்றார்.

தீர்மானம் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுவில் மாநிலத்தின் சார்பில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டப் பிறகும் இன்று வரை முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. முழுநேரத் தலைவரை நியமிக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன். மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் மக்கள் நலனுக்காக தி.மு.க இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது' என்று தெரிவித்தார். 

.