'கவர்னர் அமித் ஷாவின் அடியாள்'- மகாராஷ்டிரா விவகாரத்தில் காங். முன்வைக்கும் 10 கேள்விகள்!!

முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.

New Delhi:

மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி 10 கேள்விகளை முன் வைத்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சியமைக்க சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட சூழலில் இன்று காலையில் அதிரடி திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து பதவியேற்பும் முடிந்து விட்டன. 

முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த விவகாரத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

இந்த நிலையில் மகாராஷ்டிர அரசியல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, 'சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கவர்னரால் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வகுத்த கடமையை செய்யாமல், அமித் ஷாவின் அடியாளைப் போல செயல்பட்டிருக்கிறார் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி' என்று காட்டமாக கூறியுள்ளார். 

மேலும், பாஜக அரசு மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது குறித்து 10 கேள்விகளை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா. அவையாவன-

1. எப்போது குடியரசு தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் நீக்கப்பட வேண்டும் என்றும், எப்போது மாநில அரசு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது?

2. தேவேந்திர பட்னாவீசுக்கு ஆதரவாக எத்தனை பாஜக - தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்?

3. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கடிதத்தை கவர்னர் சரிபார்த்தாரா? அது அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக?!!

4. குடியரசு தலைவர் ஆட்சி எந்த நேரத்தில் மகாராஷ்டிராவில் நீக்கப்பட்டது?

5. குடியரசு தலைவர் ஆட்சியை நீக்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் எப்போது நடைபெற்றது? அதில் யார் பங்கேற்றார்கள்? குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் யார் சொன்னது?

6. மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று எந்த நேரத்தில் மத்திய அமைச்சரவை கவர்னருக்கு கடிதம் அனுப்பியது?

7. அந்த கடிதத்தை கவர்னர் எப்போது ஏற்றுக் கொண்டார்?.

8. எப்போது பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவீசுக்கும், அஜித் பவாருக்கும் கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்?. ஒரேயொரு தனியார் டிவி சேனலை தவிர்த்து அரசின் தூர்தர்ஷன் சேனலோ, மற்ற மீடியாக்களோ, குடிமக்களோ, அவ்வளவு ஏன், மகாராஷ்டிராவின் தலைமை நீதிபதி கூட பதவியேற்புக்கு அழைக்கப்படவில்லையே. என்ன காரணம்?.

9. உறுதிமொழி ஏற்பு நடைபெற்ற போதிலும், எப்போது பட்னாவீஸ் அரசு அமைப்பார் என்பது குறித்து கவர்னர் ஏன் எதுவும் சொல்லவில்லை?.

10. பெரும்பான்மையை பட்னாவிஸ் எப்போது நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் ஏதும் சொன்னாரா?.

இந்த 10 கேள்விகளை காங்கிரஸ் சார்பாக அதன் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா எழுப்பியுள்ளார். 

More News