This Article is From Jun 22, 2020

ரூ. 5,000 கோடி மதிப்பிலான 3 சீன திட்டங்களை நிறுத்தியது மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர அரசு சீனாவுடன் ஹெங்லி பொறியியல் திட்டத்தை ரூ.  250 கோடிக்கும், கிரேட் வால் மோட்டார்சுடன் ரூ. 3,770 கோடிக்கும், பி.எம்.ஐ. எலக்ட்ரோ மொபிலிட்டி திட்டத்தை ரூ.  1,000 கோடிக்கும் ஏற்படுத்தியிருந்தது.

சீனாவுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • சீனா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கை எடுக்கிறது
  • ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான சீன திட்டங்கள் நிறுத்தி வைப்பு
  • கடந்த வாரம் திங்களன்று நடந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்
Mumbai:

லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது  தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்ற நிலையில், ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீன திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

மகாராஷ்டிராவில் 'மேக்னடிக் மகாராஷ்டிரா  2.0' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு  நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை சீனாவின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம் லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள்  20 பேர் உயிரிழந்தனர்.  இந்த நிலையில், 3 சீன திட்டங்களை மகாராஷ்டிர அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ்  தேசாய் NDTVக்கு அளித்த பேட்டியில், 'மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி,  மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் சீன திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளோம். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். 

கடந்த  வாரம் வீடியோ கான்பரன்சிங் முறையில் மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பொருளாதார  வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சீனா, தென்கொரியா,  அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.  அதே நாளில்தான் லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. 

மகாராஷ்டிர அரசு சீனாவுடன் ஹெங்லி பொறியியல் திட்டத்தை ரூ.  250 கோடிக்கும், கிரேட் வால் மோட்டார்சுடன் ரூ. 3,770 கோடிக்கும், பி.எம்.ஐ. எலக்ட்ரோ மொபிலிட்டி திட்டத்தை ரூ.  1,000 கோடிக்கும் ஏற்படுத்தியிருந்தது.

சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள்தான்  தற்போது  தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த வெள்ளியன்று லடாக் மோதல்  தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் மகாராஷ்டிர முதல்வரும்,  சிவசேனா  கட்சி தலைவருமான  உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய உத்தவ் தாக்கரே, இந்தியா அமைதியை  விரும்புகிறது.  அதனை இந்தியாவின் பலவீனமாக எண்ணி விடக்கூடாது.  துரோகம்  என்பது சீனாவின் இயல்பான மனப்பான்மை  ஆனால் இந்தியா இயல்பாகவே வலிமை கொண்ட நாடு என்று கூறினார்.  

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சீனாவுடன் இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அனைத்தையும் மறு  பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

.