This Article is From Mar 13, 2020

ம.பி.யில் ஆட்சி கவிழ்ந்தால் அதற்குக் காரணம் பாஜக அல்ல: சிவசேனா விமர்சனம்!

2019ல் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அண்மையில் டெல்லி கலவரத்தின் போதும் பாஜவை கடுமையாக விமர்சித்த சிந்தியா, தற்போது எந்த கட்சியை எதிர்த்தாரோ அந்தக் கட்சியிலே இணைந்துள்ளார்.

ம.பி.யில் ஆட்சி கவிழ்ந்தால் அதற்குக் காரணம் பாஜக அல்ல: சிவசேனா விமர்சனம்!

22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கமல்நாத் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. (File)

ஹைலைட்ஸ்

  • ஆட்சி கவிழ்ந்தால் காரணம் பாஜக அல்ல - சிவசேனா
  • சிந்தியா ராஜினாவை தொடர்ந்து, ஆட்சிக்கு நெருக்கடி.
  • பாஜகவில் இணைந்தார் சிந்தியா
Mumbai:

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அவரது கவனக்குறைவே காரணமாகும் எனக் கடுமையாக விமர்சித்துள்ளது. 

இதுதொடர்பாக சம்னாவின் தலையங்கத்தில் வந்துள்ள கட்டுரையில், ஜோதிராதித்ய சிந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். சிந்தியா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இது கமல்நாத் அரசுக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. ஒருவேளை மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தால், அதற்கு பாஜக காரணமாக இருக்காது. கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அவரது கவனக்குறைவும், ஆணவமும், இளைய தலைமுறையைக் குறைத்து மதிப்பீடு செய்ததுமே காரணமாகும்.  

திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தின் பழம்பெரும் தலைவர்கள் ஆவார்கள். இவர்கள் அங்குச் செல்வந்தர்கள்.. அதனால், அவர்களால் அங்கிருந்தும், இங்கிருந்தும் எப்படியாவது பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களை சேர்க்க முடிந்தது. ஆனால், இது உண்மையென்றால், ஜோதிராதித்ய சிந்தியாவை தவிர்த்து மத்தியப் பிரதேசத்தில் அரசியல் செய்ய முடியாது. சிந்தியாவால் மாநிலம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாவிட்டாலும், குவாலியர் மற்றும் குணா உள்ளிட்ட பெரும் பகுதிகளில் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. 

எனினும், 2018 மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிந்தியா ஓரம்கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை சிந்தியாவே காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று இருந்த நிலையில், தேர்தலுக்கு பின்பு அவரை கட்சி மூத்தவர்கள் ஓரம்கட்டியுள்ளனர் என்று அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

2019ல் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அண்மையில் டெல்லி கலவரத்தின் போதும் பாஜவை கடுமையாக விமர்சித்த சிந்தியா, தற்போது எந்த கட்சியை எதிர்த்தாரோ அந்தக் கட்சியிலே இணைந்துள்ளார். 

நேற்றைய தினம் பாஜகவில் இணைந்துள்ள சிந்தியாவின் பெயர், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. காங்கிரஸிலிருந்து விலகிய சிந்தியா, நேற்றைய தினம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். 

.