This Article is From Dec 06, 2019

“வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!”- உள்ளாட்சித் தேர்தல் உத்தரவு; மு.க.ஸ்டாலின் ஓப்பன் டாக்!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

“வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!”- உள்ளாட்சித் தேர்தல் உத்தரவு; மு.க.ஸ்டாலின் ஓப்பன் டாக்!

வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

“உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆளும் அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த முன்வரவில்லை. வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அமல் செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கவில்லை. இதற்கு எதிராகத்தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

தற்போது வந்துள்ள தீர்ப்பைப் பார்க்கும்போது, திமுகவின் கோரிக்கைகளில் இருக்கும் நியாயங்களைப் புரிந்து கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவே தெரிகிறது. இது திமுகவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்,” என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து பேசியுள்ளார் ஸ்டாலின். 

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம், கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று (6ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. 

இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதேபோல், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எஞ்சிய மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


 

.