This Article is From Apr 05, 2019

வருமான வரித்துறை தனது கடமையைச் செய்கிறது: ஓபிஎஸ்

வருமான வரித்துறை சோதனை நடவடிக்கைகளை குறைக்கூறி மு.க.ஸ்டாலின் அனுதாபம் தேடுகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வருமான வரித்துறை தனது கடமையைச் செய்கிறது: ஓபிஎஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தொடர்ந்து, மதுபாட்டில்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யார் பண விநியோகத்தில் ஈடுபட்டாலும், அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், பொது மக்களாக இருந்தாலும், எல்லோருக்கும் சட்டம் சமம் தான்.

வருமான வரித்துறை சோதனை நடவடிக்கைகளை குறைக்கூறி மு.க.ஸ்டாலின் அனுதாபம் தேடுகிறார். அவருக்கு எந்த அனுதாபமும் கிடைக்காது. ஸ்டாலின் பேசுவது வினோதமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

.