This Article is From Apr 05, 2019

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது.

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தொடர்ந்து, மதுபாட்டில்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23-ந்தேதியும் மூடப்படும் என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
 

.