This Article is From Mar 29, 2019

''வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியாவை தந்தது பிரதமர் மோடி'' : ராகுல்

வறுமை ஒழிப்பு திட்டம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிமுகம் செய்துள்ளார். இதன்படி நாட்டில் 20 சதவீதம் உள்ள ஏழைகள் குடும்பத்திற்கு ஆண்டுக்கு தலா ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

''வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியாவை தந்தது பிரதமர் மோடி'' : ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திட்டத்தை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் விமர்சித்துள்ளார்.

Yamunanagar, Haryana:

பிரதமர் மோடி அளித்த ரூ. 15 லட்சம் வாக்குறுதியில் இருந்துதான் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியா வந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வறுமை ஒழிப்பு திட்டம் என்ற ஒன்றை வாக்குறுதியாக அளித்துள்ளார். இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் 20 சதவீத மக்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் கூறியுள்ளார். 

அவரது இந்த அறிவிப்பை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்போம் என்று கூறி வருகின்றனர் என்று பாஜக விமர்சித்துள்ளது. 

பாஜகவை கடுமையா எதிர்க்கும் மாயாவதியும், ராகுலை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''காங்கிரசும், பாஜகவும் ஒன்றுதான். ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு இரு கட்சிகளும் துரோகம் செய்துள்ளன. ஏற்கனவே வறுமையை ஒழிப்போம் என்று இந்திரா காந்தி அறிவித்திருந்தார். இப்போது ராகுல் காந்தி மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அரியானா மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது-

பிரதமர் மோடி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சத்தை போடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அவர் பொய்தான் கூறினார். யாராவது அந்த தொகையை பெற்றார்களா?  ஆனால் அவர் அளித்த வாக்குறுதிதான் காங்கிரசின் திட்டத்திற்கு உதவியது. ஏழை மக்களுக்கு நிதியுதவியை அவர்களது வங்கி கணக்கில் அளிப்பதுதான் மிகச் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். 

.