This Article is From Apr 03, 2019

விசிக பிரமுகரின் காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2.10 கோடி பறிமுதல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கதுரையின் காரில் மறைத்து வைத்து எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2.10 கோடியை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசிக பிரமுகரின் காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2.10 கோடி பறிமுதல்!

பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கதுரையின் காரில் மறைத்து வைத்து எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2.10 கோடியை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சியில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் தங்கதுரை என்பவர் காரில் மறைத்து வைத்து எடுத்துச்செல்வதாக பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச்சாவடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் நேற்றிரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த விசிக பிரமுகர் தங்கதுரையின் காரை மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், காரின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பக்க கதவுகளின் இடுக்கில் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தோ்தல் அதிகாரிகள் விசிக பிரமுகர் தங்கதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.