அவர் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்: ரஜினி (Rajini) குறித்து ஓ.பி.எஸ் கருத்து

ரஜினிகாந்த் சிறந்த நடிகர், அவரது நடிப்பை தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்.

அவர் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம்: ரஜினி (Rajini) குறித்து ஓ.பி.எஸ் கருத்து

முதலில் நடிகர் ரஜினிகாந்த் முழுமையாக அரசியலுக்கு வரட்டும், பிறகு அதுபற்றி கருத்து கூறலாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி மதுரை உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. அதில் கட்சியினருடன் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மூக்கையா தேவரின் உருவச் சிலைக்கு மாலையணிவித்தார். 

தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் பெயர் அடிபடுகிறதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சிறந்த நடிகர், அவரது நடிப்பை தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பாராட்டி வருகின்றனர். அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம் என்றார். 

தொடர்ந்து, பேசிய அவர், ஸ்டாலின் அடுத்த முதல்வராவேன் என கூறி வருகிறார். இதிலிருந்தே அவர் கற்பனை உலகில் மிதக்கிறார் என தெரிகிறது. இப்போது நான் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் திட்டம் இல்லை.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதா ஆட்சியை மக்கள் நலனுக்காக தற்போது உள்ள அரசும் நடைமுறை படுத்தி வருகிறது என்று அவர் கூறினார். 
 

More News