
மோதல் நடைபெற்று ஒருவாரம் கடந்த நிலையில் எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைலைட்ஸ்
- லடாக் எல்லையில் ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே ஆய்வு
- எல்லையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நரவானே பாராட்டு தெரிவித்தார்
- பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
சீன வீரர்கள் தாக்குதல் நடத்திய லடாக் எல்லைப் பகுதியை இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி எம்.எம். நரவானே இன்று நேரில் ஆய்வு செய்தார். வீரர்களுடன் பேசிய அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த வாரம் திங்கள்கிழமையான ஜூன் 15-ம்தேதி இரவு, லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது, சீன ராணுவத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
கற்கள், ஆணி அடிக்கப்பட்ட கம்பிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட மொத்தம் 20 வீரர்கள் உயிரிழந்தார்கள். சீனா தரப்பில் காயமடைந்த, உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 45 எனத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் லே-யில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், மோதல் சம்பவம் நடைபெற்ற லடாக் எல்லையில் நரவானே இன்று ஆய்வு மேற்கொண்டார். வீரர்களின் வீரதீரத்தை பாராட்டிய அவர், பின்னர் அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
General MM Naravane #COAS visited forward areas in Eastern #Ladakh and reviewed operational situation on the ground. #COAS commended the troops for their high morale and exhorted them to continue working with zeal and enthusiasm.#NationFirstpic.twitter.com/gc0rmw69Fs
— ADG PI - INDIAN ARMY (@adgpi) June 24, 2020
கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து இந்தியா – சீனா ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற்றுக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பதற்றம் முற்றிலும் தணிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 1967-ல் நடைபெற்ற மோதலின்போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பின்னர் சுமார் 43 ஆண்டுகள் கழித்து, கடந்த வாரம் ஏற்பட்ட தாக்குதலில் 20 வீரர்களை இந்திய ராணுவம் பறிகொடுத்துள்ளது.