This Article is From Jun 05, 2019

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் ஏற்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 10ல் ராதாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கூடங்குளம் அணுமின் உலையில் அணுக்கழிவுகளை சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற்பத்தி நடக்கிறது. மேலும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே, உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

தற்போது, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளாகவே (ஏ.எப்.ஆர்) பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி, அணுக்கழிவுகளைச் சேமிக்க திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், வரும் ஜூலை 10 ஆம் தேதி நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூடங்குளத்தில் தற்காலிகமாக (ஏ.எப்.ஆர்) பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக்கழிவுகளை மட்டுமின்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து சேமிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு பேரபாயம் ஆகும்.

ஏனெனில், கடந்த 2011ல் ஜப்பான் புகுஷிமா நகரில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அணுக்கழிவுகளால்தான் மிகப்பெரிய பாதிப்புகள் உருவாகின.

இந்தியா முழுவதிலும் இருந்து அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் கொட்டி சேமிப்பது என்பது கற்பனை செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அணுக்கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.