This Article is From Jun 18, 2019

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பொய் சொல்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லை.

தமிழகத்தில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை. ஹோட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் நவம்பர் வரை வழங்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என்று அமைச்சர் வேலுமணி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. ஆனால் தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை என்று பொய் சொல்கிறார்.

ஒரு அமைச்சர் தவறான தகவல்களை தரக்கூடாது என்பது விதி. ஒரு அரசாங்கம் பொய் சொல்லக்கூடாது. இது சட்டப்படி குற்றம். இதற்காகவே இந்த அரசைக் கலைக்கலாம்.

பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், ஸ்பெ‌ஷல் பேக்கேஜ் என்று ஒன்று உண்டு. பிரதமர் அதை தமிழகத்திற்கு கொடுக்கலாம். அதற்கு தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

வறட்சி மாநிலம் என்று அறிவித்தால் பல நிதிகளை மத்திய அரசிடம் இருந்து நாம் பெற முடியும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதை அறிவிப்பதற்கு தமிழக அரசு சுணக்கம் காட்டி வருகிறது என்று அவர் கூறினார்.

.