This Article is From Jan 02, 2020

ஒரு மாதத்தில் ஒரே அரசு மருத்துவமனையில் 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!!

அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி, குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு மருத்துவர்கள் காரணம் அல்ல என்றும் அவர்கள் முறையாக சிகிச்சை அளித்தார்கள் என்றும் நற்சான்றிதழ் அளித்திருந்தது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானின் கோடா அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Kota, Rajasthan:

ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாஜக ஆட்சியில் மருத்துவமனைகள் இருந்த தரத்தை விட தற்போது தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டேவிடம் ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தால் சோனியா காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும், குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பான காரணம் அறியப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்காக வைக்கப்படும் இன்குபேட்டரில் சில சரிவர செயல்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

2. மருத்துவக் கல்வி செயலர் மற்றும் மூத்த மருத்துவர்களை உள்ளடக்கிய குழு கடந்த டிசம்பர் 27-ம்தேதி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது. அதிக குளிர் குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கமிட்டி தெரிவித்துள்ளது. 

3. உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான குழந்தைகள் மிக மோசமான நிலையின்போது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன என்று, மருத்துவ கல்வியின் செயலரும், விசாரணை கமிட்டியின் தலைவரமான வைபவ் கலேரியா தெரிவித்துள்ளார்.

4. மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் கோடா மருத்துவமனை அமைந்துள்ளது. உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில், கோடா மருத்துவமனையில் 2015-ல் 1260 பேரும், 2016-ல் 1193 பேரும் உயிரிழந்தனர். இவை பாஜக ஆட்சியின்போது நடந்திருந்தது. 2019-ல் இந்த எண்ணிக்கை 963-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2018-ல் 1005 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். 

5. டிசம்பர் 27-ல் மாநில மருத்துவக் கல்வி செயலர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. இதில், குழந்தை பிறப்பு பகுதியில் உள்ள இன்குபேஷன் சரிவர செயல்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பற்றாக்குறை காரணமாக 2 குழந்தைகள் ஒரே இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தனர். 

6. ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், 'குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மருத்துவ உதவி அளிப்பதுதான் எங்களது பொறுப்பு. சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தன. விரும்பினால், எங்களது நடவடிக்கைகளை பாஜக ஆய்வு செய்து கொள்ளட்டும். காப்பாற்ற முடிந்த குழந்தைகளின் உயிரை நாங்கள் காப்பாற்றியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

7. முதல்வரால் நியமிக்கப்பட்ட 3 நபர்களைக் கொண்ட குழு தனது அறிக்கையில், 'குழந்தைகள் உயிரிழப்புக்கு பல காரணங்கள் உள்ளன. கடுங்குளிர் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைகளின் உடல்நிலையை இன்னும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றது. குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப்பட்டதும் முக்கிய காரணம்' என்று கூறப்பட்டுள்ளது.

8. கோடா சம்பவத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆளாகி வருகிறது. யோகி ஆதித்யநாத், மாயாவதி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

9. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுபற்றி கூறுகையில், 'மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். ஜோத்பூர் எய்ம்ஸை சேர்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழு கோடா மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு குழந்தைகளின் உயிரிழப்பு குறைந்திருக்கிறது' என்று கூறியுள்ளார். 

10. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில், 'நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை தொடர்பு கொண்டு, கோடா மருத்துவனைக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன். அப்போதுதான் அங்கு மாநில அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் குறித்து அவர் அறிந்து கொள்வார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

.