''CAA குடியுரிமையை பறிக்காது; மாறாக குடியுரிமையை வழங்கும்'' - பிரதமர் மோடி பேச்சு

துறைமுக நிகழ்ச்சியை தவிர்த்து நேதாஜி சுபாஷ் கப்பல் தளத்தில் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுதுபார்க்கும் தளத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்டவற்றையும் மோடி மேற்கொள்கிறார்.

''CAA குடியுரிமையை பறிக்காது; மாறாக குடியுரிமையை வழங்கும்'' - பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடியுடன் சில நிகழ்ச்சிகளில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பங்கேற்பார் என தெரிகிறது.

Kolkata:

மேற்கு வங்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார். காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஹவுராவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை அலுவலகத்தில் மோடி தனது இரவை நேற்று கழித்தார்.

ராம கிருஷ்ண மடத்தில் மாணவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசியதாவது-

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். மடத்தின் தலைவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நான் இங்கு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். பெலூர் மடம் என்பது ஒரு புனித இடம மட்டுமல்ல. எனக்கு இந்த இடம் சொந்த வீட்டிற்கு செல்வதைப் போன்றதாகும்.

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விளக்கத்தை பெறுவதற்கு விரும்பவில்லை. நாங்களும் எண்ணற்ற விளக்கத்தை அளித்தோம். அவற்றை தவறாக எதிர்க்கட்சிகள் வழி நடத்துகின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பதை உலகமே அறியும். 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்யும் கொடுமைகளுக்கு அந்நாடு பதில் அளித்தே ஆக வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தளவில்லை, வடகிழக்கின் கலாசாரம், புவியியல் அமைப்பு, பண்பாடு உள்ளிட்டவற்றையும், அப்பகுதி மக்களின் நலனையும் குடியுரிமை சட்ட திருத்தம் பாதிக்காது என்பதை உறுதியாக சொல்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

 கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரது மேற்கு வங்க பயணம் தற்போது அமைந்திருக்கிறது.

குறிப்பாக கொல்கத்தாவின் மையப் பகுதியாக இருக்கும் தர்மதலா என்ற இடத்தில் இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர் மோடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணி ரஷ்மோனி சாலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்டித்து தர்ணா செய்தனர்.  

முன்னதாக நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமரை திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

இதுகுறித்து பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ‘மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். மேற்கு வங்க மக்கள் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்ற ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தேன்.

அவர் என்னிடம் டெல்லியில் இதுதொடர்பாக கூட்டம் நடக்கும்போது பங்கேற்று பேசுமாறு கூறினார். மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசின் நிதி ரூ. 38 ஆயிரம் கோடி வரவேண்டியுள்ளது. இதில் புல்புல் புயல் பாதிப்பு நிதி ரூ. 7  ஆயிரம் அடங்கும். இதனை உடனடியாக அளிக்கும்படி மோடியிடம் வலியுறுத்தினேன்.' என்றார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் மத ரீதியாக அச்சுறுத்தப்பட்டார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. இது முஸ்லிம்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.

More News