This Article is From Jan 17, 2019

கொடநாடு விவகாரம்: மக்களுக்கு இழைத்த துரோகம்! - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

இதை தேர்தலுக்காக செய்யவில்லை. பல ஆண்டுகளாக அனுபவித்ததை இன்று குற்றம்சாட்டுகிறார்கள்

கொடநாடு விவகாரம்: மக்களுக்கு இழைத்த துரோகம்! - கமல்ஹாசன் குற்றச்சாட்டு


கொடநாடு விவகாரம், மக்களுக்கும் அவர்கள் தமக்கே இழைத்துக்கொண்ட துரோகத்திற்கும் ஒரு சான்றாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகத்தை, அதன் தலைவர் கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

கொடநாடு விவகாரத்தில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆராயவேண்டும். ஆராய வேண்டியது அதிகாரிகள். தேவைப்பட்டால் மேலிடத்திலிருந்து இதை ஆராய வேண்டும். கொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி இருக்கிறது. மக்களுக்கும் அவர்கள் தமக்கே இழைத்துக்கொண்ட துரோகத்திற்கும் ஒரு சான்றாக உள்ளது.

நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் அதைக் கேட்கவேண்டாமா? ஏதோ அவசரத்தில் நாங்கள் குற்றம் சாட்டிவிட்டோம் என்று சொல்ல முடியாது. இதை தேர்தலுக்காக செய்யவில்லை. பல ஆண்டுகளாக அனுபவித்ததை இன்று குற்றம்சாட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்ததை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

தொடர்ந்து அவரிடம் 10% இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், நான் சொல்வது, இட ஒதுக்கீடு என்பது ஒரு காரணத்திற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ஏற்பாடு. அந்த காரணம் நீங்கிவிட்டப்பின் இதுகுறித்து யோசிக்கலாம். 

அப்படிப்பட்ட காரணம் நீங்கவில்லை என்பதுதான் எனது எண்ணம். அப்படியே நீங்கள் பெரும் வல்லுனர்கள் எங்களைவிட நல்ல யோசனை வைத்திருப்பார்களேயானால் உள்ள ஒதுக்கீடுக்கு எந்தவிதமான குந்தகமும் விளைவிக்காமல் நிறைவேற்றலாம். இருக்கும் இட ஒதுக்கீட்டில் கைவைக்கக்கூடாது என்று அவர் கூறினார். 
 

.