This Article is From Jan 16, 2019

கொடநாடு விவகாரம்: மக்கள் நீதி வழங்குவார்கள்: அமைச்சர் தங்கமணி

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

கொடநாடு விவகாரம்: மக்கள் நீதி வழங்குவார்கள்: அமைச்சர் தங்கமணி


முதலமைச்சர் மீது பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி வழங்குவார்கள் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அதில், வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இதையடுத்து, கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்று கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு காவல்துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார். மேலும் சயான், மனோஜை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். 

ஆளுநரை சந்தித்து ஸ்டாலினும் மனு கொடுத்துள்ளார். முதல்வர் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக அதிமுக சார்பிலும் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீதான புகார் அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம். முதலமைச்சர் மீதான புகாரில் கடுகளவும் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். 
 

.