This Article is From Aug 09, 2019

கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை! கொச்சி விமான நிலையம் மூடல்!

வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கேரள அரசு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்படன
  • 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்
  • 50 கி.மீ வேகத்தில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
New Delhi:

கேரளாவில் தொடரும் கனமழையை அடுத்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது. ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. 

பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக் கெடுத்துள் ளது. ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

இதற்கிடையே, கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
 

.