கடத்தப்பட்ட ஐடி ஊழியர்: என்கவுன்டர் நடத்தி மீட்ட காவல்துறை!

‘இந்த கும்பல் இதுபோல் அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு பிணயத்தொகை கேட்பது இது முதன்முறை அல்ல’ எனக் கூறியுள்ளனர்

கடத்தப்பட்ட ஐடி ஊழியர்: என்கவுன்டர் நடத்தி மீட்ட காவல்துறை!

ஹைலைட்ஸ்

  • கடத்தப்பட்ட மென்பொருள் பொறியாளர் ஒரு வாரத்திற்கு பின் மீட்பு
  • கடத்தல்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே என்கவுன்டர்
  • கடத்தியவரை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் பினயத்தொகை
டெல்லி அருகில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஒரு வாரத்துக்கு முன் கடத்தப்பட்டு இன்று காலை கடத்தல்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடத்தப்பட்ட என்கவுன்டர் தாக்குதலில் மீட்கப்பட்டார்.

நொய்டாவில் உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் ராஜீவ் குமார். இவர் கடந்த வாரம் வியாழக்கிழமை தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹரித்வாருக்குக் கிளம்பியுள்ளார். ஆனால், டெல்லிக்கு அருகிலுள்ள காஸியாபாத்தின் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ராஜிவ் தான் பயணித்த வாடகைக் காரிலிருந்து இறங்கியவுடன் கூட்ட நெரிசல் மிகுந்த அந்தப் பகுதியிலிருந்து ஹரித்வாருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ராஜிவின் மனைவிக்கு ராஜிவின் செல்போனிலிருந்து தான் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. மேலும் கடத்தியவரை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் பினயத்தொகையாகவும் கேட்கப்பட்டது’ எனத் தெரிவித்தனர்.

இதன் பின்னர் காவல் துறையினரின் ஒரு வார கால தேடுதலுக்குப் பின்னர் காஸியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் இருந்து ராஜிவ் குமார் கண்டுபிடிக்கப்பட்டார். கடத்தல்காரர்களின் இடத்தைக் கண்டுபிடித்து நொய்டா மற்றும் காஸியாபாத் போலீஸார் இணைந்த சிறப்புக் குழு ஒன்று தான் ராஜீவை மீட்டுள்ளது.

ராஜீவை மீட்க நடந்த என்கவுன்டர் தாக்குதலில் போலீஸார் இருவரும் கடத்தல்காரர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். போலீஸார் கூறுகையில், ‘இந்த கும்பல் இதுபோல் அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு பிணயத்தொகை கேட்பது இது முதன்முறை அல்ல’ எனக் கூறியுள்ளனர்.