This Article is From Aug 12, 2018

மூழ்கும் பாலத்தில் ஓடி குழந்தையைக் காப்பாற்றிய வீரரின் சுவாரசிய பின்னணி

கேரளாவில் மூழ்க இருந்த பாலத்தில் ஓடிச்சென்று NDRF வீரர் குழந்தையைக் காப்பாற்றித் தூக்கிக்கொண்டு ஓடிவரும் காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது

ஹைலைட்ஸ்

  • கண்ணையா குமார் ஆழ்நீச்சலில் பயிற்சி பெற்றவர்
  • குழந்தையை காப்பாற்றிய சில நிமிடங்களில் பாலம் வெள்ளத்தால் மூழ்கியது
  • வெள்ளம், நிலச்சரிவுகளால் கேரளத்தில் மழைக்கு இதுவரை 37பேர் பலி
Idukki:

கேரளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 37 பேர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பரித்து வந்த வெள்ளத்தால் மூழ்க இருந்த பாலத்தில் இருந்து, தனது உயிரையும் துச்சமென மதித்துக் குழந்தையைத் காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் கேரளத்தின் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

பிகாரைச் சேர்ந்த பேரிடர் மீட்புப் படை வீரர் கண்ணையா குமார். இவர் கேரள வெள்ளத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மூழ்கும் பாலத்தின் மேல் ஓடும் திக்திக் வீடியோ நாடெங்கும் வைரலாகி வருகிறது. இவர் குழந்தையைக் காப்பாற்றிய அடுத்த சில நிமிடங்களில் அப்பாலம் மூழ்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தின் மறுமுனையில் ஒருவர் குழந்தையைப் பிடித்துக்கொண்டு, பாய்ந்து வரும் வெள்ளத்துக்கு அஞ்சியபடி, பாலத்தைக் கடக்க நின்றிருந்ததை கண்ணையா பார்த்துள்ளார். அடுத்த நொடியே ஒடிச் சென்ற அவர் பாலத்தின் மறுமுனையை அடைந்தார்.

ca393s18

"நின்றிருந்தவர் யார் எனக் கேட்கக்கூட எனக்கு நேரமில்லை. அவர்களுக்குப் பாலத்தைக் கடக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அச்சத்தில் அப்படியே நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தேன். நான் இருந்த முனையில் பல அரசியல்வாதிகள், உள்ளூர்வாசிகள், அலுவலர்கள் இருந்தார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வேகமாக ஒடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தேன். என் பின்னாலேயே குழந்தையின் தந்தையும் ஓடி வந்து மறுமுனையை அடைந்தார். மேலும் எனக்கு அது புதிதில்லை. இதில் எனக்கு ஆறு ஆண்டு அனுபவம் உண்டு. அதனால்தான் உடனடியாக இப்படி முடிவெடுத்துக் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது" என்கிறார் கண்ணையா.

k4bufcl8

அரக்கோணம் பேரிடர் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நான்காவது படைப்பிரிவில் ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் கண்ணையா, ஆழ்நீச்சலில் பயிற்சி பெற்றவர். தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பேரிடர் மீட்புப் பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

"எனக்கும் எனது அணியினருக்கும் மிகுந்த பெருமையாக உள்ளது. கண்ணையா தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த NDRF படையினருக்கும் பெருமை சேர்த்துள்ளார்" என்று அவரது உயரதிகாரி மகாவீர் சிங் கூறினார்.

கேரளாவில் ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் மழைக்கு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் 14 வரை மழை நீடிக்கும் எனத் தெரிகிறது. 35000 பேர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 404 மீட்புப் படை வீரர்கள் 14 அணிகளாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

.