This Article is From Apr 18, 2020

கேரளாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 85 வயது முதியவர் உயிரிழந்தார்!

ஏப்ரல் 7, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அவரிடமிருந்து கொரோனா பரிசோதனைக்கான மூன்று முறை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் இவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 85 வயது முதியவர் உயிரிழந்தார்!

உயிரிழந்த நபரின் கடைசி மூன்று மாதிரிகளின் அடிப்படையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தார்

Malappuram:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,000ஐ கடந்திருக்கிறது. இதுவரை 480 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த 85 வயது முதியவர் கேரளாவில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 தேசிய அளவில் கொரோனா பாதிப்புகளை கேரளா சிறப்பாக கையாண்டு வருகிறது. உயிரிழப்புகளின் விகிதம் இதர மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஜனவரி 20 அன்று கேரளாவில் கண்டறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலத்தின் மலப்புரம் பகுதியில் சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுடன் கொரோன தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில்  முதியவர் ஒருவர் சிகிச்சைபெற்று வந்திருந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 7, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அவரிடமிருந்து கொரோனா பரிசோதனைக்கான மூன்று முறை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் இவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"உயிரிழந்த நபர் முன்னதாக ஐ.சி.யு.வில் இருந்தார், கரோனரி தமனி நோய் சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்" என அவர் அனுமதிக்கப்பட்ட அரசு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கே.வி.நந்தகுமார் கூறியுள்ளார்.

உயிரிழந்த நபர் ஐசியுவில் கண்காணிப்பிலிருந்தார். கடந்த இரண்டு நாட்களில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொரோனா பரிசோதனைக்கு வழக்கமாக இரண்டு முறை மட்டுமே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். ஆனால், இவருக்கு ஏப்ரல் 7, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று முறை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொரோனா தொற்று தொடர்பான மரணம் அல்ல. இது இயல்பான வயது மூப்பின் காரணமான மரணம் என்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாபர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இறந்தவர்களின் இறுதி சடங்கு குறித்த கேள்விக்கு, “ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 20க்கும் அதிகமானோர் பங்கேற்க முடியாது. ஆனால், இதில் எவ்வித கொரோனா தொற்றுக்கான பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றப்படாது” என்றும், “இது குறித்து மருத்துவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டிருக்கின்றன” என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில், 396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

.