கார் மோதியதில் பத்திரிகையாளர் உயிரிழப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை!!

ஐ.ஏ.எஸ். அதிகாரி குடித்து விட்டு காரை ஓட்டி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவின் தலைநகரில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Thiruvananthapuram:

கேரளாவில் கார் மோதியதில் பைக்கில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் இன்று நள்ளிரவு 1 மணிக்கு நடந்துள்ளது. சிராஜ் என்ற மலையாள நாளிதழில் பணியாற்றி வரும் முகமது பஷீர் என்பவர் திருவனந்தபுரத்தில் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் மீது நீல நிற ஃபோக்ஸ் வாகன் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பஷீர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். 

போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கட ராமன் என்பது தெரியவந்தது. அவருடன் பெண் ஒருவரும் அந்தக் காரில் இருந்துள்ளார். அவருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விசாரிக்க, வெங்கடராமனிடம் இரத்த மாதிரியை போலீசார் கேட்டதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று வெங்கட ராமனின் இரத்த மாதிரிகளை பெற்றனர். இதன்பின்னர் தான்தான் காரை ஓட்டி வந்ததாக வெங்கட ராமன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது வெங்கடராமன் குடித்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விபத்தால் தூக்கி வீசப்பட்ட பைக், சுவரில் மோதி ஏறி நிற்பதையும், உயிரிழந்த பஷீரின் இரத்தம், செருப்பு உள்ளிட்டவை சிதறிக் கிடப்பதையும் படத்தில் காண முடிகிறது. 
 

oehfm9n8

பஷீரின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

உயிரிழந்த பத்திரிகையாளர் பஷீருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கைதான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் ஒரு மருத்துவர் ஆவார். வெளிநாட்டில் இருந்த அவர், நாடு திரும்பி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதிகாரியாக வந்துள்ளார்.

2017-ல் இடுக்கி மாவட்டத்தில் துணை ஆட்சியராக வெங்கட ராமன் இருந்தபோது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். அப்போது அவர் பரபரப்பாக கேரளாவில் பேசப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(With inputs from PTI)