This Article is From Aug 20, 2018

கேரள வெள்ளத்தை தீவிர இயற்கைப் பேரிடராக அறிவித்தது மத்திய அரசு

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கேரள வெள்ளத்தை தீவிர இயற்கைப் பேரிடராக அறிவித்தது மத்திய அரசு

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு, “தேசிய பேரிடர் என்று எதையும் அறிவிப்பதற்கு விதிமுறைகளில் இடமில்லை. அது வெறுமனே சொல்லாடல்களில் புழங்கும் ஒரு பதம்தான். மற்றபடி கேரள வெள்ளச் சீற்றத்தை மத்திய அரசு ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ என்று மூன்றாம் படிநிலை (Level 3) இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது” என்று பதில் அளித்துள்ளது.

இதனிடையே கடந்த ஐந்து நாட்களில் ஐந்தாவது முறையாகக் கூடிய தேசிய நெருக்கடி மேலாண்மை ஆணையம் கேரளாவில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் பற்றி சீராய்ந்தது. இதில் வீடியோ கான்பரன்சிங் வழியாகக் கலந்துகொண்ட கேரள தலைமைச் செயலர், கேரளத்தில் மழை குறைந்துள்ளதாகவும் வெள்ளநீர் வடியத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். பல மத்திய அமைச்சகங்களின் செயலர்களும் மூத்த இராணுவ அதிகாரிகளும் பேரிடர் மேலாண்மை அலுவலர்களும் இச்சீராய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை நூறு மெட்ரிக் டன் பருப்பு, தானியங்களை கேரளத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை அவசரகால மருந்துகளை 52 மெட்ரிக் டன் அளவுக்கு விமானம் மூலம் அனுப்பியுள்ளது. மேலும் 20 மெட்ரிக் டன் இன்று இரவே கேரளா வந்தடையும். 20 மெட்ரிக் டன் ப்ளீச்சிங் பவுடரும் ஒரு கோடி குளோரின் மருந்துகளும் நாளைக்குள் அனுப்பப்படும். 12 மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன. இதுவரை நோய்ப்பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை.

மின்சக்தி அமைச்சகம் தன் பங்குக்கு மின்சார மீட்டர்கள், காயில்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை மின்சார விநியோகத்தை சீரமைக்க உதவியாக அனுப்புகிறது. தொலைத்தொடர்புத்துறை மாநிலத்தில் மொத்தமுள்ள 85,000 டவர்களில் 77,000 டவர்களை இயங்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. 1407 டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்களில் 13ஐத் தவிர அனைத்தும் செயல்படும் நிலையில் உள்ளன. மேலும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டறிய 1948 என்னும் சிறப்பு உதவி எண்ணையும் தொடங்கியுள்ளது.

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம் 12000 லிட்டர் மண்ணெண்ணெயினை கேரளத்துக்கு அளித்துள்ளது. போதுமான எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விமானத்துக்குத் தேவையான எரிபொருளும் இருப்பில் உள்ளது.

கால்நடைத் தீவனங்கள் 450 மெட்ரிக் டன் அளவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கால்நடை மருந்துகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை மூலமாக போதுமான அளவுக்கு பால், பால் பவுடர் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

கட்டணம் ஏதுமின்றி இலவசமாக குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பதாக இரயில்வே அறிவித்துள்ளது.

.