This Article is From Nov 15, 2018

சபரிமலை விவகாரம்: பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

சபரிமலை விவகாரம்: பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு!

கேரளாவில் பாஜக மற்றும் காங்கிரஸ், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இரண்டு முறை சபரிமலை கோயில் திறக்கப்பட்டது
  • ஆனால், இதுவரை இள வயது பெண்கள் கோயிலுக்குள் செல்லவில்லை
  • வரும் 17 ஆம் தேதி மீண்டும் சபரிமலை திறக்கிறது
Sabarimala, Kerala:

வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில், ‘மண்டல மகரவிளக்கை' முன்னிட்டு திறக்கப்படும். இதையொட்டி, சபரிமலையில் மீண்டும்  பதற்றமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சபரிமலையில் தரிசனம் செய்யப் போவதாக தெரிவித்து, கேரள காவல் துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு பல்லாண்டு காலமாக அனுமதி மறுக்கப்பட்டது. காலம் காலமாக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், அனைத்துப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பரபரப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என அன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்ப்பை அடுத்து, இரண்டு முறை சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. ஆனால், அப்போது பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட போதும், அது நடக்கவில்லை. அங்கு கூடியிருந்த வலதுசாரி போராட்டக்காரர்கள் பெண்களை நுழைய விடாமல் தொடர்ந்து தடுத்தனர். 

வரும் 17 ஆம் தேதி, இதைப் போன்ற பதற்ற சூழல் மறுபடியும் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியல் பட்டவர்த்தனமாக சபரிமலை விவகாரம் மூலம் தெரிய வந்துள்ளது. பாஜக தலைவர்கள் தான் சபரிமலையில் பிரச்னை செய்யத் தூண்டியுள்ளனர்' என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். 

கேரளாவில் பாஜக மற்றும் காங்கிரஸ், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு சமர்பித்த வாக்குமூலத்தில், ‘கேரள அரசு, சபரிமலை குறித்த எந்த விஷயத்திலும் தலையிட்டதில்லை. தலையிடவும் போவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தான் அரசு செயல்படுத்த முயல்கிறது. ஆனால், சில அரசியல் கட்சிகள் அவர்களின் ஆதாயத்துக்காக போராட்டம் செய்து வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளது.

.