This Article is From Oct 12, 2019

வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!

முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர்.

வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!

எலியூத் சாதனை படைத்திருப்பதை கென்ய மக்களும், மாரத்தான் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.

42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 

34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் 1நிமிடம் 39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் ஓட வேண்டும் என்பதற்காக எலியூத் ஆண்டுக்கணக்கில் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. 

அமெரிக்காவின் வியன்னா பார்க்கில் அவர் இந்த சாதனையை செய்து முடிக்க, கூடியிருந்த பார்வையாளர்கள் கூட்டம் உற்சாகம் மிகுதியால் ஆர்ப்பரித்தது. எலியூத்துடன் துணைக்காக 41 பேர் பல்வேறு தொலைவுகளில் உடன் வந்தார்கள். அவருக்கு முன்பாக கார் ஒன்று இயக்கப்பட்டு அதில் நேரம் காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. 

வரலாற்று சாதனை படைத்தாலும் எலியூத் மிகுந்த எளிமையுடன் பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், '2 மணி நேரத்திற்குள் மாரத்தானை முடித்திருக்கிறேன். இதனை செய்த முதல் மனிதன் நான்தான். மனிதர்களால் இத்தகைய சாதனையை செய்ய முடியும். மற்றவர்களும் இதனை செய்ய வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாக நான் இருக்க விரும்புகிறேன். மனித சக்திக்கு அளவே இல்லை. 

நாம் இந்த உலகை மிக அழகானதாக, அமைதி கொண்டதாக மாற்ற முடியும். எனது சாதனையை பார்க்க மனைவி, 3 குழந்தைகள் வந்துள்ளனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.' என்று கூறியுள்ளார். 

எலியூத் சாதனை படைத்திருப்பதை கென்ய மக்களும், மாரத்தான் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். 

.