This Article is From Jan 22, 2019

ரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குள் அடிதடி… கர்நாடக அரசியலில் பரபர!

கர்நாடகாவில் பாஜக தரப்பினர், தங்கள் எம்.எல்.ஏ-க்களை அவர்கள் வசம் இழுக்க குதிரை பேரம் நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது

காங்கிரஸ் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தலைமறைவாகத்தான் இருந்து வருகின்றனர். 

ஹைலைட்ஸ்

  • ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏ-தான் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
  • கணேஷ் என்கின்ற எம்.எல்.ஏ-தான் ஆனந்தை தாக்கியுள்ளதாக தெரிகிறது
  • கணேஷ், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
Bengaluru:

பெங்களூருவிற்கு வெளியே ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ள இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. சனிக்கிழமை மாலை ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏ-வை, ஜே.என்.கணேஷ் எம்.எல்.ஏ சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, கணேஷ் காங்கிரஸ் கட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடத்தில் காங்கிரஸ் தலைமை சீக்கிரமே விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. 

கர்நாடக போலீஸிடம் ஆனந்த் சிங் அளித்த புகாரில், தன்னை கணேஷ் தடியால் அடித்ததாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காலி செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கணேஷுக்கு எதிராக காவல் துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தானும் சண்டையில் காயப்பட்டுள்ளதாக கணேஷ் கூறியுள்ளார். 

கர்நாடகாவில் பாஜக தரப்பினர், தங்கள் எம்.எல்.ஏ-க்களை அவர்கள் வசம் இழுக்க குதிரை பேரம் நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்துத்தான் மாநிலத்தில் கட்சி சார்பில் இருக்கும் 80 சட்டமன்ற உறுப்பினர்களில் 76 பேரை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி மேலிடம். கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தலைமறைவாகத்தான் இருந்து வருகின்றனர். 

இப்படி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே சண்டை நடந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கும் வண்ணம் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள காங்கிரஸின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான சிவக்குமாரா, “எங்கள் எம்.எல்.ஏ-க்கள் யாரும் கைகலப்பில் ஈடுபடவில்லை. ஆனந்த் சிங்கிற்கு நெஞ்சு வலி வந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று விளக்கம் அளித்துள்ளார். 

பெங்களூரு மருத்துவமனையில் ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆனந்த் சிங்கிற்கு தலை, மூக்கு, முகம் மற்றும் கண்ணில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எங்களிடத்தில் கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கணேஷுக்கு எதிராக ஆனந்த் சிங் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தற்போது வலியுறுத்தி வருகிறார். அதே நேரத்தில் கணேஷோ, “ஆனந்த் சிங் குடும்பத்தாரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் மனதளவில் காயம் அடைந்திருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஊடகங்கள் இந்த விஷயத்தைப் பற்றி சொல்லும் அனைத்தும் பொய்” என்று கூறியுள்ளார். 


 

.