
சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளார்
ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கையில் மாற்றத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் எதிர்க் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி என அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார். கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளார்.
Today at the airport a CISF officer asked me if “I am an Indian” when I asked her to speak to me in tamil or English as I did not know Hindi. I would like to know from when being indian is equal to knowing Hindi.#hindiimposition
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020
இந்த சம்பவத்தையடுத்து தனது பயணத்தை தொடங்கிய கனிமொழி டிவிட்டரில் இது குறித்து, “இந்தியராக இருப்பதெனில் இந்தி பேசுவதற்கு சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது?” என கேள்வியெழுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு என்கிற ஹேஷ்டேகையும் பயன்படுத்தியுள்ளார்.
Outright ridiculous. Highly condemnable. A linguistic test , what next? @CISFHQrs should respond! https://t.co/D34IKrNLj6
— Karti P Chidambaram (@KartiPC) August 9, 2020
கனிமொழியின் டிவிட்டிற்கு, காங்கிரஸ் எம்.பி மணிகம் தாகூர்,“இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம், “வெளிப்படையான அபத்தம் இது.” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எப்போது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக உள்ளது. 1960 களில், அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயற்சித்தபோது, மாநிலத்தில் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டது. இது தமிழகத்தில் திமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்தது.
திமுக மும்மொழி கல்விக் கொள்கையை முற்றிலுமாக எதிர்பதுடன் புதிய கல்விக் கொள்கை 2020ஐயும் முற்றிலுமாக எதிர்க்கின்றது. மேலும், பல மாற்றங்களையும் முன்வைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.