This Article is From Jan 17, 2019

2016 தேசத்துரோக வழக்கு: கண்ணையா குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

2016ல் ஜே.என்.யூ-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசத்துக்கு எதிராக முழக்கமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் கண்ணையா குமாரும் ஒருவர் ஆவார்.

ஹைலைட்ஸ்

  • 2016ல் நடந்த நிகழ்ச்சிக்காக கண்ணையா குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.
  • இது, அரசியல் நோக்கம் கொண்டது என கண்ணையாகுமார் கூறியுள்ளார்.
New Delhi:

கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு எதிரான நிகழ்ச்சியை நடத்தியதாக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார், உமர் காலித் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்டோர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கண்ணையா குமார் பல்கலைக்கழக  வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும், நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும் கூறி, அவர் மீது தேச விரோத குற்றச்சாட்டு பதியப்பட்டு கண்ணையா கைது செய்யப்பட்டார். இவரது கைது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவின் கைப்பாவையாக போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த விவகாரம் குறித்து கண்ணையா குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது உண்மையானது போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலிருந்தே தெரிகிறது. இது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

.