This Article is From Jun 27, 2018

சோனியா காந்தியுடன் சந்திப்பு - புதிய வியூகம் வகுக்கிறாரா கமல்?

நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய டெல்லி சென்ற கமல் ஹாசன், ராகுல் காந்தியை சந்தித்தார்

ஹைலைட்ஸ்

  • நேற்று ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்
  • இன்று சோனியா காந்தியை சந்தித்துள்ளார்
  • தமிழக அரசியல் நிலை குறித்து ஆலோசித்ததாக கூறினார் கமல்
NEW DELHI:

நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய டெல்லி சென்ற கமல் ஹாசன், ராகுல் காந்தியை சந்தித்தார். பின் டெல்லியிலேயே தங்கிய அவர், இன்று காலை சோனியா காந்தியைச் சந்தித்தார்.

சந்திப்பு குறித்து பேசிய கமல்ஹாசன் “ இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறினார். “அரசியல் தலைவர்கள் என்பதைத் தாண்டி, இருவரும் ஒரே குடும்பம். நேற்று மகனைச் சந்தித்தேன், இன்று தாயை சந்தித்தேன். இரண்டையும் ஒரே சந்திப்பாக பார்க்க வேண்டும்” என்றார்.

இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு “ அது பற்றி பேச, இன்னும் நேரம் வரவில்லை” என்று பதிலளித்தார். “ தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து ஆலோசித்தோம் “ என்று மட்டும் கூறினார்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கவில்லை என்றும், தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவேன் என்றும் தெரிவித்தார்

சமீப காலமாக, முக்கிய அரசியல் தலைவர்களோடு கமல் ஹாசன் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் ஆதரவில் கர்நாடக முதலமைச்சராக இருக்கும் குமாரசாமியை இரண்டு வாரங்களுக்கு முன் சந்தித்து பேசினார். இப்போது காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ளார். இப்படி வரிசையாக எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வரும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக வைத்து வியூகம், வகுக்கிறாரா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

.