‘நான் சந்தர்ப்பவாதி கிடையாது..!’- கமல்ஹாசன் பேச்சு

‘வாய்ப்புள்ள நேரத்தில் நான் அரசியலில் காலெடுத்து வைத்திருந்தாலும், நான் சந்தர்ப்பவாதி கிடையாது’ என்றுள்ளார் கமல்

‘நான் சந்தர்ப்பவாதி கிடையாது..!’- கமல்ஹாசன் பேச்சு
Mumbai:

அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், திமுக-வின் தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்கத் தொடங்கிய போதும் தான், தமிழ் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தங்கள் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தனர். இதனால், இருவர் மீதும் பலதரப்பட்ட கேள்விகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தை கமல், ‘வாய்ப்புள்ள நேரத்தில் நான் அரசியலில் காலெடுத்து வைத்திருந்தாலும், நான் சந்தர்ப்பவாதி கிடையாது’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தனது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கினார் கமல். தொடர்ந்து அவர் தேர்தல் ஆணையத்திலும் கட்சியை முறைப்படி பதிவு செய்துவிட்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுகுக்கு ஆயத்தமாகி வருகிறார் கமல்ஹாசன். அதேநேரத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, தேசிய அரசியல் கட்சித் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை நேரில் சென்று சந்திப்பது என்று படு பிஸியாக இருக்கிறார். அவரிடம் கூட்டணி குறித்து கேட்ட போது, ‘எதுவும் நடக்கலாம். தமிழக நலனுக்காக யார் பாடுபடுவர். தமிழகத்துக்காய யார் உழைப்பர் என்பதைப் பொறுத்துதான் கூட்டணி வைப்பது முடிவு செய்யப்படும். அது மிகவும் கடினமான விஷயம் இல்லை. அந்தக் கேள்விகளை எனக்குள்ளேயே கேட்டு, அதற்கு உண்மையாக பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியவர், 

‘பாஜக-வுடன் கமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருக்கிறார் என்று அடிபடும் பேச்சுகள் குறித்து’, ‘எனது கொள்கையும் கோட்பாடும் மிகத் தெளிவாக இருக்கிறது. நான் வாய்ப்புள்ள நேரத்தில் அரசியலில் காலெடுத்து வைத்திருந்தாலும், சந்தர்ப்பவாதி கிடையாது. எனக்கு ஒரு இலக்கு இருக்கிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் பன்முகத்தன்மையை தக்கவைக்க வேண்டியதுதான் எனது கடமை’ என்றார்.

Newsbeep

‘ரஜினியுடன் உங்கள் அரசியல் பிரவேசத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றனரே?’ என்ற கேள்விக்கு, ‘நான் என்னை ஒரு கலைஞனாகத்தான் கருதினேன். ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். ஆனால், நம் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை இது என்று உணர்ந்துள்ளேன். என்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. அவரும் நானும் வெவ்வேறானவர்கள்’ என்று பதிலளித்தவர் மேலும், ‘மக்கள் தான் எனக்கு முக்கியம். மக்களுக்காக எனது திரைப் பயணத்தை அரசியல் பயணத்துக்காக முடித்துக் கொள்ளவும் தயங்கமாட்டேன்’ என்றார் உறுதிபட.