This Article is From Oct 03, 2019

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

தொடர் மரணங்களால், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும்

Chennai:

பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுகவினர் வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தமிழக அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால் தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்று பிரதமருக்கு ட்வீட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில், சுபஸ்ரீயின் மரணத்தை சமாளிக்க தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் போராடி வரும் நிலையில், உங்கள் பதாகைகளை அமைப்பதற்கான அனுமதியைப் பெற தமிழ்நாடு அரசு நீதிமன்றங்களை அணுகியுள்ளது.

இந்த இடையூறு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை நீங்கள் ஒரு முன்னோடியாகச் செய்தால், அது தமிழர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையை பிரதிபலிக்கும். மேலும், அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தைப் பெற்றுதரும். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "முதலில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை மத்திய அரசு சார்பாக ஒரு மனுவை தாக்கல் செய்வது தவறு. மத்திய அரசுக்கு ஆலோசனை மையம் இல்லையா? ஒரு தடையில் இருந்து, அரசாங்கத்திற்கு விலக்கு அளிக்க எந்த விதியும் இல்லை என்று கூறிய அவர், நிச்சயம் நான் இதனை எதிர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சியான திமுக இன்னும் எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. 

.