This Article is From May 20, 2019

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு!

கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே- கமல்

Chennai:

கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கமல், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இன்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் பரப்புரையில் ஈடுபட்ட போது, ‘முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களும், ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.

அதில், ‘நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார். பிரக்யா தாகூரின் இந்த கருத்துக்கு பாஜக தலைமை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

இப்படி தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியுள்ளது கமலின் பேச்சு. 

வழக்கு விசாணையின்போது கமல் தரப்பு, "நான் கோட்சே குறித்து சொன்னது வரலாற்று உண்மை. அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில் சொல்லப்பட்ட கருத்து அது. என் பேச்சின் சாரம் உள் நோக்கத்துடர் திரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.
 

.