This Article is From Feb 21, 2019

‘கட்சிக் கொள்கை என்ன..?’- புதிய விளக்கம் கொடுத்த கமல்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

‘கட்சிக் கொள்கை என்ன..?’- புதிய விளக்கம் கொடுத்த கமல்

சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் இன்று கொடி ஏற்றி வைத்தார் கமல்

ஹைலைட்ஸ்

  • கமல், மய்யம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுகிறது
  • இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் இன்று கமல் கலந்து கொள்கிறார்
  • தேர்தல் கூட்டணி குறித்து கமல் கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை கட்சியின் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் இன்று கொடி ஏற்றி வைத்தார் கமல். அப்போது கட்சியின் கொள்கை குறித்து புதிய விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கமல், ‘எங்கள் கொள்கை என்பது மிகச் சாதாரணமானது. மக்கள் நலன் மட்டும்தான் எங்கள் கொள்கை. கொள்கை குறித்து கட்டுக் கட்டாக புத்தகம் போட்டவர்கள் எல்லாம் அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். இப்போது கொள்கை அடிப்படையில் கூட்டணி என்று பிதற்றுகிறார்கள். நாங்கள் மக்கள் நலனை மட்டும் முன் வைத்து கொள்கைகளை வகுப்போம்' என்று கூறினார். 

கட்சி ஆரம்பித்த ஓராண்டு கடந்துவிட்ட பின்னரும், எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் கட்சி இயங்குகிறது என்று கமல் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில், கட்சியின் கொள்கைகள் குறித்தும் வரையறுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கட்சியின் கொள்கை குறித்து முன்னர் ஒருமுறை பேசியபோது, ‘இடதும் வலதும் இல்லாமல் மய்யத்தில் இருந்து சிந்தித்து செயல்படுவது சிரமம். அப்படி, சிந்தித்து செயல்படும் வகையில் எங்கள் கொள்கை இருக்கும்' என்று விளக்கம் கொடுத்திருந்தார். 


 

.