This Article is From Jul 21, 2018

‘இது வெறும் ஆரம்பம் தான்!’- ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்கவேயில்லை

‘இது வெறும் ஆரம்பம் தான்!’- ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா

ஹைலைட்ஸ்

  • சிவசேனா, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை
  • 2019 தேர்தலில் தனித்து போட்டி, சிவசேனா
  • ராகுல் பிரதமருக்குக் கொடுத்தது ஷாக், சிவசேனா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது நடந்து கொண்ட விதம் குறித்து பாராட்டி பேசியுள்ளது, பாஜக-வின் வெகுநாள் கூட்டாளி சிவசேனா.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ரஃபேல் ஒப்பந்தம் முதல் நாட்டின் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினார் ராகுல். அவர் பேசும்போது, பாஜக எம்.பி-க்கள் பலர் கூச்சலிட்டனர். தனது உரையின் முடிவில் ராகுல், 'நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. இது தான் ஒரு இந்துவாக இருப்பது என்று நான் கூறுவேன்' என்று சொல்லி, மோடியின் இருக்கைக்கு வந்து அவரை ஆரக்கட்டித் தழுவினார்.

இது குறித்து பாஜக-வினர், 'சிறுபிள்ளைத்தனமான நடத்தை' என்று ராகுலை விமர்சித்தனர்.

ஆனால், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், 'ராகுல் காந்தி, அரசியல் பள்ளிக்கூடத்திலிருந்து தேர்ச்சி பெற்று வந்திருக்கிறார் என்பது அவர் நடந்து கொண்ட விதத்தை வைத்துப் பார்த்தால் தெரிகிறது. ராகுல் கட்டித்தழுவியது பிரதமருக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ராகுலுக்கு, இது வெறும் ஆரம்பம்தான்' என்று காங்கிரஸ் தலைவர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்கவேயில்லை. அமித்ஷா, தாக்கரேவுடன் பேசியதாகவும், அதனால் சிவசேனாவின் ஆதரவு அரசுக்கு இருக்கும் என்றும் பாஜக தெரிவித்தது. இந்நிலையில், சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்காதது அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சிவசேனா, 'நாங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்' என்று தொரந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

.