நீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி

இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன.

நீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் - கே.எஸ்.அழகிரி

நீதிபதி இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 12 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த அறிவிப்பினை தற்போது புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் 222வது பிரிவின் (1) வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி கலந்தாலோசித்து, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பினை ஏற்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்க அறிவிப்பு குறிப்பிட்டிருக்கின்றது.

இந்நிலையில், நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.,  ராகுல் காந்தி, துணிச்சலாகச் செயல்பட்ட நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதை மக்கள் நினைவில்  கொள்ள வேண்டும் என நீதிபதி லோயாவை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருந்தார். 

இதேபோல், பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, நீதிபதி முரளிதர் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை மாறாக, வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.   கோடிக்கணக்கான இந்தியர்கள் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கையைச்  சீர்குலைக்கும் அரசின் முயற்சி இழிவானது என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து, நீதிபதி இடமாற்றம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, 

“இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன.

நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்தி வருகிற செயலில் ஈடுபட்டிருப்பதை விட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் அதிகார அத்துமீறலால் பலியாகி வருகிறது.

எனவே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.

முதற்கட்டமாக டெல்லியில் நடந்த வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com