This Article is From Dec 09, 2019

குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி! JNU மாணவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் தடியடி!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

பிகாஜி கமா மெட்ரோ ரயில் நிலையம் அருகே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

New Delhi:

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்  தடியடி நடத்தி மாணவர்களை போலீசார் கலைத்தனர். குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. பல்கலைக் கழக நிர்வாகம் உயர்த்திய விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை எதிர்த்து மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். 

பிகாஜி கமா ப்ளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தை மாணவர்கள் கடக்க முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையத்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன்பின்னர் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 

தற்காலிக தடுப்புச் சுவர்களை தள்ளிவிட்டும், அதனை தாண்டிச் செல்லவும் முயன்ற மாணவர்களை போலீசார் பின்னோக்கி இழுக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி உள்ளது. 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் விடுதிக் கட்டணத்தை சுமார் 300 சதவீதம் வரையில் நிர்வாகம் உயர்த்தியிருக்கிறது. இதனைக் கண்டித்து மாணவர்கள் ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கையை பல்கலைக் கழக நிர்வாகம் நிரகாரித்தது. பகுதியளவு கட்டணத்தை குறைப்பதாக பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்துடைப்பு என்று கூறி மாணவர்கள் நிராகரித்தனர்.

 இதையடுத்து அவர்கள், குடியரசு தலைவரை நேரில் சந்தித்து  மனு அளிப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பேரணியாக அவர்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி சென்றனர். இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்களை தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். 

முன்னதாக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தரப்பிலிருந்து குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில், பல்கலைக் கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட போலீஸ் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குடியரசு தலைவரிடம் முன் வைக்கப்பட்டன. 
 

.