This Article is From May 30, 2020

ஜெ.தீபாவும் தீபக்கும்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை, அவரின் நினைவிடமாக மாற்ற சமீபத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

ஜெ.தீபாவும் தீபக்கும்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹைலைட்ஸ்

  • தீபக், தீபா, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள்
  • தீபா, ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து சொந்தமாக கட்சி ஆரம்பித்தார்
  • பின்னர் அவர் தீவிர அரசியலிலிருந்து விலகினார்
Chennai:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும்தான், அவரின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து வாரிசுச் சட்டத்திற்குக் கீழ் இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

அஇஅதிமுக சார்பில் ஒருவர், ஜெயலலிதாவின் சொத்துகளைப் பார்த்துக் கொள்ள ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை, அவரின் நினைவிடமாக மாற்ற சமீபத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அவசரச் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து NDTV சார்பில் ஜெ.தீபாவை சந்தித்தோம். “உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டமானது செல்லுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அது குறித்து ஆளுநரிடம் விரைவில் முறையிடுவேன்,” என்று தீபா கூறினார். 

மேலும் அவர், “தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் எங்களிடத்தில் கொடுப்பதுதான் முறையானது. கோடநாட்டில் உள்ள 1000 ஏக்கர் எஸ்டேன், ஐதராபாத்தில் இருக்கும் திராட்சைத் தொட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் எங்களிடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து சொத்துகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதில் வெளி நபர் யாருக்கும் பங்கிருக்கக் கூடாது,” என்று திட்டவட்டமாக கூறினார். 

ஜெயலலிதாவுடன் தனது நெருங்கிய உறவு குறித்துப் பேசிய தீபா, “அவர் முதல்வராக இருந்தபோது கூட, போயஸ் தோட்ட இல்லத்திற்கு எங்களை அடிக்கடி அழைப்பார். தீபாவளி, பொங்கல் சமயத்தில் அவருடன் நாங்கள் இருந்துள்ளோம். ஒரு குடும்பமாக நாங்கள் நேரம் செலவிட்டுள்ளோம். 

இவையெல்லாம் பொதுப் பார்வைக்குத் தெரியாது. எங்களை அவர் பொதுப் பார்வைக்கு அழைத்து வர விரும்பவில்லை. எங்களின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார். எங்களுக்காக அவர் அஞ்சினார்,” என்கிறார் நெகிழ்வுடன்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சொந்தமாக கட்சி ஆரம்பித்தார் தீபா. ஆனால் சில நாட்களிலேயே தீவிர அரசியலிலிருந்து அவர் விலகினார். மீண்டும் அரசியல் பிரவேசத்துக்கு வாய்ப்புள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, “காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்,” என முடித்தார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் மூலம், அதிமுகவினரை ஆதரவை பெருமளவு பெற திட்டமிட்டது அரசு தரப்பு. ஆனால், அதற்குத் தற்போது தடையாக வந்துள்ளது நீதிமன்றத் தீர்ப்பு. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியிடம் அதிமுக படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

.