This Article is From Aug 05, 2019

ஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு!

Jammu And Kashmir: தொடர்ந்து அமர்நாத் பக்தர்கள், வெளிமாநில மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு!

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கடந்த வாரம் திடீரென மத்திய அரசு ராணுவ படைகளின் எண்ணிக்கையை  அதிகரித்தது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தாலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற பெரும் சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

தொடர்ந்து அமர்நாத் பக்தர்கள், வெளிமாநில  மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அனைத்து ஜனநாயக விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மத்திய அரசு மீறப்போவதை காட்டுகிறது. அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலை கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுக் கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. 

வீட்டுச் சிறை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளை எப்படி வீட்டுச் சிறையில் வைக்க முடியும்? ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்படுவதை இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.' என்று கூறியுள்ளார். 

.