This Article is From Aug 02, 2019

காஷ்மீரில் பதற்றம்: 25 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிப்பு!

இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நேற்று காலை முதலே ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Jammu And Kashmir: காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 10,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மேலும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 37-வது பிரிவு நீக்கப்படலாம் என்றும் அப்போது, பெரும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பபடுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

கடந்த வாரம் காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். அவர் திரும்பிய பின்னரே துணை ராணுவ படையினர் குவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் கடந்த வாரம் கூறும்போது, வடக்கு காஷ்மீரில் ராணுவ படையினர் குறைவாக இருப்பதாகவும், அதனால்தான் கூடுதல் படைகள் தேவை என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதகமான வானிலை காரணமாகவே, தற்காலிகமாக யாத்திரையை நிறுத்துவதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்தாலும், வானிலை நிலைகளில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் அந்த பகுதியில் தெரியவில்லை. 

முக்கிய வழிபாட்டு தலங்கள், நீதிமன்றங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் வீரர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வியாழனன்று, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். 

.