குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் :குண்டு காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

போராட்டக்காரர்களை கலைப்பதற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதகாவும், தோட்டாக்கள் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடைப்பட்ட களத்தில் விழுந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. 

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் :குண்டு காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் நேற்று முதல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

New Delhi:

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 2 போராட்டக்காரர்களுக்கு குண்டுக் காயம் (Bullet Injury) ஏற்பட்டதாகவும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் நேற்று முதற்கொண்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் குண்டுக் காயங்களுடன் 2 பேர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை NDTVக்கு மருத்துவனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைப்பதற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதகாவும், தோட்டாக்கள் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடைப்பட்ட களத்தில் விழுந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தீ வைப்பு சம்பவங்களும், கல்வீச்சும் நடந்தன. போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவற்றை பிரயோகப்படுத்தினர். 

நேற்று நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, உறுதிப்படுத்தப்படாத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் குண்டு காயங்களுடன் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற காட்சிகள் இருந்தன. 

இருப்பினும், துப்பாக்கிச் சூடு ஏதும் நடைபெறவில்லை என்றும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் டெல்லி போலீசின் செய்தி தொடர்பாளர் ரந்தவா கூறியுள்ளார். 

நேற்று போராட்டம் நடைபெற்றபோது, அனுமதி அளிக்கப்படாத பகுதியில் பேரணியாக செல்ல வேண்டாம் என்று போலீசார் போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். இருப்பினும், இதன்பின்னர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதுடன் கல் வீச்சிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வன்முறையாளர்களை போலீசார் கலைத்தனர். 

பின்னர் பல்கலைக் கழகத்தை சுற்றி வளைத்த போலீசார் சுமார் 100 மாணவர்களை கைது செய்தனர். அதிகாலை 3 மணிக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 

போலீசார் எந்தவித அனுமதியும் இன்றி பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்ததாகவும், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது. பல மாணவர்கள் நூலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கழிவறையில் இருந்தும் மாணவர்களை போலீசார் கைது செய்தது போன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரத் தொடங்கியுள்ளன. 

சட்டம் ஒழுங்கை பராமரிக்க யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வளாகத்தின் அமைப்பை சுட்டிக்காட்டியுள்ள போலீசார், போராட்டக்காரர்களை துரத்திச் சென்றபோது உள்ளே செல்ல நேர்ந்ததாகவும், பின்னர் மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

போலீசாருக்கு பாஜகதான் உத்தரவை பிறப்பித்ததாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போலீசார் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீசின் செய்தி தொடர்பாளர் ரந்தவா தெரிவித்துள்ளார்.