This Article is From May 30, 2020

‘மீண்டும் அரசியல் பிரவேசமா..?’- ஜெ.தீபா சூசக பதில்

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சொந்தமாக கட்சி ஆரம்பித்தார் தீபா.

‘மீண்டும் அரசியல் பிரவேசமா..?’- ஜெ.தீபா சூசக பதில்

“அவர் முதல்வராக இருந்தபோது கூட, போயஸ் தோட்ட இல்லத்திற்கு எங்களை அடிக்கடி அழைப்பார்"

ஹைலைட்ஸ்

  • ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபாவையும், தீபக்கையும் அறிவித்துள்ளது நீதிமன்றம்
  • ஜெயாவின் சொத்துகள் இருவருக்கும்தான் சேரும் என அறிவிப்பு
  • தீபக், தீபா ஆகியோர் ஜெயாவின் அண்ணன் பிள்ளைகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும்தான், அவரின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து வாரிசுச் சட்டத்திற்குக் கீழ் இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து NDTV சார்பில் ஜெ.தீபாவை சந்தித்தோம். “உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டமானது செல்லுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அது குறித்து ஆளுநரிடம் விரைவில் முறையிடுவேன்,” என்று தீபா கூறினார். 

மேலும் அவர், “தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் எங்களிடத்தில் கொடுப்பதுதான் முறையானது. கோடநாட்டில் உள்ள 1000 ஏக்கர் எஸ்டேன், ஐதராபாத்தில் இருக்கும் திராட்சைத் தொட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் எங்களிடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து சொத்துகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதில் வெளி நபர் யாருக்கும் பங்கிருக்கக் கூடாது,” என்று திட்டவட்டமாக கூறினார். 

ஜெயலலிதாவுடன் தனது நெருங்கிய உறவு குறித்துப் பேசிய தீபா, “அவர் முதல்வராக இருந்தபோது கூட, போயஸ் தோட்ட இல்லத்திற்கு எங்களை அடிக்கடி அழைப்பார். தீபாவளி, பொங்கல் சமயத்தில் அவருடன் நாங்கள் இருந்துள்ளோம். ஒரு குடும்பமாக நாங்கள் நேரம் செலவிட்டுள்ளோம். 

இவையெல்லாம் பொதுப் பார்வைக்குத் தெரியாது. எங்களை அவர் பொதுப் பார்வைக்கு அழைத்து வர விரும்பவில்லை. எங்களின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார். எங்களுக்காக அவர் அஞ்சினார்,” என்கிறார் நெகிழ்வுடன்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சொந்தமாக கட்சி ஆரம்பித்தார் தீபா. ஆனால் சில நாட்களிலேயே தீவிர அரசியலிலிருந்து அவர் விலகினார். மீண்டும் அரசியல் பிரவேசத்துக்கு வாய்ப்புள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, “காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்,” என்று முடித்தார். 
 

.