This Article is From Mar 17, 2020

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!

ஷாகின்பாக் வழி இருப்புப் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்க கோரிக்கை

ஹைலைட்ஸ்

  • சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஓத்திவைக்க இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை
  • உலக அளவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது
  • நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய கூட்டமைப்பு முடிவு

சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்த போராட்டம் 30வது நாளை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின்  தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “உலக அளவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாலும், நம் நாடு இதைத் தேசியப் பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும், நாட்டு மக்களின் உயிரையும், நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து ஷாகின்பாக் வழி இருப்புப் போராட்டங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு பொதுமக்களைத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

நாட்டு மக்கள் மீது அக்கறையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது. எனினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால் நாம் தொடர் இருப்புப் போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முற்படுமேயானால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”எனத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

.