நீதிமன்றம், “ஊடரங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம்,” என்று உத்தரவிட்டது
ஹைலைட்ஸ்
- மே 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன
- உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது
- உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டது
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போது, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், மூன்றாவது முறையாக ஊரடங்கை இந்திய அரசு அமல் செய்தபோது, மாநில அரசுகள் கொரோனா தொற்று அதிகம் இல்லாத இடங்களில் மதுபானக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
இதை எதிர்த்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மனுவில், “டாஸ்மாக் திறப்பதற்கு அரசு விதித்த சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது,” என்று குறிப்பிட்டு வாதிட்டது மய்யம் தரப்பு. இதை ஏற்ற நீதிமன்றம், “ஊடரங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது. ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம்,” என்று உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் ஆன்லைனில் மதுவாங்க பல இணையதள முகவரிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இப்படிப் பரவும் இணையதள முகவரிகளும் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் பல மதுப் பிரியர்கள், இந்த போலி இணையதளங்கள் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்து தங்கள் பணத்தை தொலைத்து வருகிறார்கள். பொதுவாக இதைப் போன்ற இணையதளங்களில் மதுபானம் தேவையென்று ஆர்டர் செய்தால், அதற்கு உண்டான பாதி விலையை முதலில் ஆன்லைன் மூலமாகவே செலுத்தச் சொல்வார்கள். டெலிவரியின் போது மீதிப் பணத்தைக் கொடுக்கச் சொல்வார்கள். இது குறித்து கேட்டறிய போலி இணையதளம் சார்பில் ஒரு மொபைல் என்னும் பகிரப்படும். பணத்தை ஆன்லைனில் கொடுப்பதற்கு முன்னர் அந்த எண் உபயகத்தில் இருக்கும் என்றும், பணப் பரிமாற்றத்திற்குப் பின் அது உபயோகத்தில் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் போன்ற போலி இணையதளங்களில் மதுபானங்களை ஆர்டர் செய்து ஏமாற வேண்டாம் என்று தமிழக காவல் துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.