This Article is From Jun 15, 2020

சமூக பரவல் இல்லை என்பது உண்மையா? தொற்று அதிகரிக்க காரணம் என்ன? ஸ்டாலின் கேள்வி

ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?

சமூக பரவல் இல்லை என்பது உண்மையா? தொற்று அதிகரிக்க காரணம் என்ன? ஸ்டாலின் கேள்வி

சமூக பரவல் இல்லை என்பது உண்மையா? தொற்று அதிகரிக்க காரணம் என்ன? ஸ்டாலின் கேள்வி

ஹைலைட்ஸ்

  • சமூக பரவல் இல்லை என்பது உண்மையா?
  • தொற்று அதிகரிக்க காரணம் என்ன?
  • தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது

சமூக பரவல் இல்லை என்பது உண்மையா? தொற்று அதிகரிக்க காரணம் என்ன? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது.

கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க வேண்டும். அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் சார்பில் ஐந்து முக்கிய கேள்விகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.

1. கொரோனா நோய்த் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் சொல்வது உண்மையென்றால், ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?

2. கொரோனாவை அறவே ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொய்ப் பேட்டிகளை நிறுத்தி விட்டு உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய்த்தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கு குறிப்பாக சென்னையில், அப்படிச் செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?

3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?

4. இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்டோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?

5. பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்தி விட்டு கொரோனா பேரிடரின் விளைவாக, நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப்போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

.