This Article is From Feb 21, 2019

விஜயகாந்தை கூட்டணிக்கு இழுக்கும் திமுக – தூது சென்றார் திருநாவுக்கரசர்

விஜயகாந்துடன் பாஜக முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.

விஜயகாந்தை கூட்டணிக்கு இழுக்கும் திமுக – தூது சென்றார் திருநாவுக்கரசர்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • விஜயகாந்துடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேச்சுவார்த்தை
  • பாஜக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி
  • முடிவை அறிவிக்காமல் மவுனம் காக்கிறது தேமுதிக

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் திமுக சார்பாக தூது சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

ஏற்கனவே பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி.யை அதிமுக ஒதுக்கிய நிலையில், தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்பதாகவும், இதற்கு அதிமுக ஒப்புகொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாசிட்டிவான பதில் ஏதும் இதுவரை கிடைக்காததால் விஜயகாந்த் தரப்பினர் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜயகாந்தின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றதாக கூறினார்.

முன்பு தமிழக அமைச்சர்கள் சிலரும், மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், விஜயகாந்தை நலம் விசாரித்து வந்தனர்.

விஜயகாந்த்  - திருநாவுக்கரசரின் சந்திப்பு தேமுதிகவை திமுக கூட்டணி பக்கம் இழுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை தேமுதிகவை விமர்சித்து திமுக தரப்பில் இருந்து வலுவான விமர்சனங்கள் ஏதும் வரவில்லை. விஜயகாந்த் இன்னும் முடிவை அறிவிக்காத நிலையில் இன்னும் சில நாட்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க - “விஜயகாந்துடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை

.