This Article is From Feb 17, 2020

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது.

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!

தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதைதொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. 

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு ஆணையர் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 120 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

எனினும், வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்திலும் மற்றும் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தொடர்ந்து 4வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து, இப்போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

.