ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி ஆவேசம்

2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராகும் படி சிபிஐ நோட்டீஸ் விடுத்த நிலையில், இது தொடர்பாக பிரியங்கா காந்தி ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி ஆவேசம்

ப.சிதம்பரத்திற்கு துணை நின்று உண்மைக்காக போராடுவோம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

New Delhi:

எதற்கும் அச்சப்படாமல், உண்மையை பேசி வரும் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, என்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்சநீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது, அவர் வீட்டில் இல்லாததால் திரும்பினர்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு துணை நின்று உண்மைக்காக போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்வீட்டரில் அவர் கூறியதாவது, 

 


நாடாளுமன்றத்தின் மிகவும் தகுதிவாய்ந்த, மதிப்புமிக்கவர் ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராக பல தசாப்தங்களாக நாட்டுக்காக சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளார்.

உண்மையை பேசும் ப.சிதம்பரம், மத்திய அரசின் தோல்விகளை எதற்கும் அச்சப்படாமல், வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அந்த உண்மையை ஏற்க கோழைகளுக்கு சிரமமாக உள்ளது. இதற்காக, அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது. 

எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாகவே இருக்கும். அவரை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.