This Article is From Feb 22, 2019

தேமுதிகவை இழுப்பதில் தீவிரம்; ஓ.பி.எஸ் - அமித்ஷா ஆலோசனை பின்னணி!

தேமுதிகவோடு ஓரிரு நாட்களில் கூட்டணி அமைந்துவிடும் என அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவை இழுப்பதில் தீவிரம்; ஓ.பி.எஸ் - அமித்ஷா ஆலோசனை பின்னணி!

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படி பரபரப்பான சூழலில் தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் கூட்டணி குறித்த அறிவிப்பை திமுக – காங்கிரஸ் வெளியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இராமநாதபுரத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுடன், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில், கூட்டணியின் தேர்தல் பரப்புரை வியூகம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து, அமித்ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் தேமுதிக கேட்டுள்ள தொகுதிகள் பரிசீலிக்கப்படுமா? என்பது குறித்தும் ஆலோசனை செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம், ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் என்று கூறினார்.

.