This Article is From Mar 14, 2020

கொரோனா பாதிப்பு: பெங்களூரில் அலுவலகத்தை காலி செய்த இன்போசிஸ் நிறுவனம்!

பெங்களூரு அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐபிஎம் கட்டிடத்திலிருந்து மட்டும் நாங்கள் வெளியேறுகிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு: பெங்களூரில் அலுவலகத்தை காலி செய்த இன்போசிஸ் நிறுவனம்!

Coronavirus: பெங்களூரில் அலுவலகத்தை காலி செய்த இன்போசிஸ் நிறுவனம்

ஹைலைட்ஸ்

  • பெங்களூரில் அலுவலகத்தை காலி செய்த இன்போசிஸ்!
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐபிஎம் கட்டிடத்தில் இருந்து வெளியேறுகிறது.
  • ஊழியர்கள் எச்சரிக்கையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுரை
Bengaluru:

பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை இன்போசிஸ் நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது. 

இதுதொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் பெங்களூரு மேம்பாட்டு மையத் தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே மின்னஞ்சல் வழியாக அளித்துள்ள தகவலில், பெங்களூரு அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐபிஎம் கட்டிடத்திலிருந்து மட்டும் நாங்கள் வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரில் மட்டும் பல வளாகங்களைக் கொண்டுள்ளது. ௧௯௯௦ களிலிருந்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 

அலுவலகத்தை காலி செய்யும் நடவடிக்கை என்பது, எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், எங்கள் பாதுகாப்பிற்கான இடத்தை நாங்கள் சுத்தப்படுத்துவோம்" என்றும் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். 

மேலும், தங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் அமைதி காத்து, எச்சரிக்கையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமூகவலைத்தளங்களில் வரும் எந்தவொரு தகவல்களையும் நம்புவதையோ, அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அவசரக் காலங்களில் நிறுவனத்தின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கையாளுகிறோம் என்பதை உறுதிப்படுத்த உங்கள் ஆதரவைக் கோருகிறோம்," என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, இந்த தொழில்நுட்ப மையத்தில் உள்ள அனைத்து ஐ.டி மற்றும் பயோடெக் நிறுவனங்களும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தங்கள் ஊழியர்களை ஒரு வாரம் தங்கள் வீடுகளிலிருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவுறுத்திய நிலையில், இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. 

.